மதுரை: 'சி.ஏ.ஜி' அறிக்கை அம்பலப்படுத்தியுள்ள உலக மகா டோல் கேட் ஊழலான பரனூர் டோல் கேட்டை இனி பா.ஜ.க மாடல் டோல் கேட் என அழைக்கலாம் என மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய பா.ஜ.க அரசின் ஏழு ஊழல்களைப் பற்றி பேசியுள்ள சி.ஏ.ஜி அறிக்கை ஒரு பெரும் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று 'டோல் கேட் ஊழல்'(toll gate scam). டோல் கேட்டுகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள டோல் கேட்டுகள் (Public Funded Toll Gates). இரண்டாவது வகை, தனியார் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள டோல் கேட்டுகள். (BOT toll gates).
செங்கல்பட்டு - பரனூர் டோல் கேட் அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும் பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலையை கொண்ட டோல் கேட் ஆகும். அதன் வழியாக ஆகஸ்ட் 2019லிருந்து ஜூன் 2020 வரையிலான காலத்தில் 1,17,08,438 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் என்பது மலைக்க வைக்கும் எண்ணிக்கை. ஆனால், அதை விட மலைக்க வைக்கிற தகவலை சி.ஏ.ஜி அறிக்கை தருகிறது. அவற்றில் 62,37,152 வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போன வி.ஐ.பி வாகனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
பரனூர் டோல் கேட் மட்டுமல்ல. பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள மற்ற டோல் கேட்டுகளிலும் இதுதான் நிலைமை, ஆத்தூர் டோல் கேட்டில் 36% வி.ஐ.பி வாகனங்கள் இலவசமாக சென்றுள்ளன. ஜனவரி 2020 முதல் செப் 2020 வரையிலான காலத்தில் கப்பலூர் டோல் கேட் 25% வி.ஐ.பி வாகனங்கள் இலவசமாக சென்றுள்ளன. லம்பாலகுடி டோல் கேட்டில் 18% வி.ஜ.வி வாகனங்கள் இலவசமாக சென்றுள்ளன.
தனியார் டோல் கேட்டுகளில் இந்த கணக்கு தலை கீழாக உள்ளது. செங்குறிச்சி டோல் கேட்டும் சென்னை சாலையில் தான் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ளது. அங்கே ஜனவரி 2020 முதல் செப் 2020 வரை கடந்து சென்ற வாகனங்கள் 49,77,901 ஆகும். அவற்றில் கட்டணம் கட்டாத விஐபி வாகனங்கள் 12.60% அதே போல் கணியூர் டோல் கேட் 11.12%. வேலன் செட்டியூர் டோல் கேட் 7.13%. பாளையம் டோல் கேட் 6.93%. வைகுண்டம் டோல் கேட் 6.76%. கொடை ரோடு டோல் கேட் 6.06% மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.