மதுரை:தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கிளர்க்காக பணியாற்றி வரும் ஆயி பூரணம் சுமார் ரூ.4 கோடி மதிப்பு மிக்க அந்த இடத்தை தனது மகள் 'ஜனனி' நினைவாக அரசுக்கு தான பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த நில பத்திரத்தை முறையாக மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்டக்கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்து ராணி முன்னிலையில் பூரணம் மற்றும் அவர்களின் உறவினர்கள் கடந்த 10ஆம் தேதி ஒப்படைத்தனர்.இந்நிகழ்ச்சியின் போது முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில் குமார், மற்றும் கொடிக்குளம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பூர்ணம் உடனிருந்தனர்.
கொடிக்குளம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சம்பூர்ணம் ஈடிவி பாரத்திற்கு கூறுகையில், ஆயி என்ற பூரணம் எங்களது பள்ளியின் முன்னாள் மாணவி ஆவார். தனது பெண் ஜனனியின் பெயரால் நடுநிலைப் பள்ளியாக இருக்கும் கொடிக்களம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தன்னுடைய நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்குகிறார்.
கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு ஜனனி கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் காலமானார். திருமணம் ஆகி இருந்தாலும் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் ஆயி பூரணம். அப்போதிருந்து தனது மகளை பூரணம், வேறு திருமணம் செய்து கொள்ளாமல் வளர்த்து வந்தார். தனது பெண் இறந்ததற்கு பிறகு அவருக்கு சேர வேண்டிய இந்த சொத்தை தான் தற்போது குழந்தைகள் பயன்பெறுவதற்காக பள்ளி கல்வித்துறைக்கு தானமாக வழங்கியுள்ளார்.
இந்தப் பகுதியில் உயர்நிலைப் பள்ளி எதுவும் கிடையாது. கொடிக்குளம் கிராமத்தை சுற்றியுள்ள 10 கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் இங்கு பயில்வதற்கு வாய்ப்பு உருவாகும். தற்போது நடுநிலைப் பள்ளியாக இருப்பதால் மாணவ மாணவியர் 140 பேர் இங்கே படிக்கின்றனர். உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டால் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பள்ளியில் சேர்வதற்கு வாய்ப்பு உருவாகும்" இவ்வாறு கூறினார்.
இதனிடையே, இந்த தகவல் அறிந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நேற்று ஆயி பூரணம் பணிபுரியும் வங்கிக்கு நேரில் சென்று அவருக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஆயி பூரணம் அம்மாவின் கைகளை பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை. அள்ளிக் கொள்வதற்கென்று நிறைய கைகள் உள்ளது? ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது. முதல் நாள் சுமார் 7 கோடி மதிப்புள்ள நிலத்தை கல்வித் துறைக்கு கொடையாக அளித்துவிட்டு மறுநாள் வங்கியில் கிளார்க் வேலையை சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருக்கும் ஆயி பூரணம் அம்மாளின் கரங்களைப் பற்றி வணங்கினேன்" என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை கல்விப் பணிக்காக தானம் வழங்கிய ஆயி பூரணத்திற்கு இன்று (ஜன.12) வெள்ளிக்கிழமை கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூரணத்திற்கு அப்பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:அதிகாரம் இருந்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் தயங்குவது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி