மதுரை:மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து பேசியபோது, சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே பரிந்துரைத்த நிலையில், ரயில்வே போர்டு இன்னும் அனுமதி கொடுக்காமல் உள்ளது. அமைச்சர் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தேன். அதை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.
ரயில் பவனில் டிஆர்இயு மற்றும் ஐசிஎஃப் யுனைட்டட் வொர்க்கர்ஸ் யூனியன் தலைவர்கள் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை சந்தித்தபோது, தண்டவாள பணியின்போது ரயில் மோதி மரணிக்கும் கொடுமையை தடுக்க ரயில்வே டிராக் மேன்களுக்கு உடனடியாக ரட்சக் என்ற பாதுகாப்பு கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
அதேபோல 4,800, 5,400 கிரேடு பே-க்களுக்கு பதவி உயர்வு வழங்க அக்கவுண்ட்ஸ் அல்லாத பிரிவுகளுக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளதை சங்கப் பிரதிநிதிகள் வரவேற்றனர். அதில் விடுபட்ட பிரிவுகளுக்கும் அதற்கு விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத உச்சவரம்பு 5,400 கிரேடு பே பதவி உயர்வு பெறுவதை தடுப்பதாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியபோது, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், பிரச்னைகள் தீர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
4,600 என்ற உச்ச கிரேடு உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் இந்த விதியை பொருத்த வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். தொழிற்சங்க அங்கீகார தேர்தல் புதிய தொகுப்பு சட்டத்தின்படியே உயர்ந்த பட்சம் ஐந்து ஆண்டுகள்தான் என்ற போதிலும், 9 ஆண்டுகள் அங்கீகார தேர்தல் நடத்தாமல் இருப்பது தொழிற்சங்க ஜனநாயகத்திற்கு முரணானது என்று சுட்டிக்காட்டி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
தொழில் உறவு தொகுப்பு சட்டம் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அமல்படுத்தப்படும் என்பதற்கு உத்ரவாதம் இல்லை என்று கூறிய போது, 'ஆம் அதற்குள் தொகுப்பு சட்டம் அமலாவது சாத்தியமில்லை' என்று ரயில்வே அமைச்சர் ஒத்துக் கொண்டார். எனவே, சங்கம் அமைச்சரிடம் 2013 தேர்தலில் 20 சதவீத வாக்கு பெற்ற சங்கங்களுக்கு அங்கீகார அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, அதனை பரிசளிப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.
ட்ராக்சன் சிக்னல், பிரிட்ஜ் தண்டவாளப்பிரிவு ஆர்ட்டிசான்கள் போன்ற தொழிலாளர்களும் பணியின்போது ரயில் மோதியோ, மின்சார அதிர்ச்சியின் காரணமாகவோ உயிரிழக்க நேரிடுவதால், அவர்களுக்கும் ரிஸ்க் அலவன்ஸ் வழங்க வேண்டும். கேட்டரிங் டிபார்ட்மென்டில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்து பின் நிரந்தரமான பேரர்களுக்கு அவர்களின் பணி காலத்தின் பாதியை பென்சனரி பயன்களுக்கு கணக்கிட எடுத்துக்கொள்ள பல நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதுகுறித்து பொதுவான உத்தரவை ரயில்வே அமைச்சகம் வெளியிட வேண்டும்.
அதேபோல எக்ஸ் கேடரில் உள்ள தண்டவாள பழுது கண்டுபிடிக்கும் தொழிலாளர்களின் (USFD) 18 பேரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்; தெற்கு ரயில்வேயில் முறைப்படி பணியமர்த்தப்பட்ட 531 சப்ஸ்டிடியூட்டுகளான அப்ரண்டிஸ்கள் பணி நிரந்தரமும் பதவி உயர்வும் இன்றி உயர் நீதிமன்ற வழக்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு அந்த வழக்கை விரைந்து முடிக்க ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்;
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயிலுக்கான ட்ராக்சன் மோட்டார் இறக்குமதி செய்யப்படுகிறது, அதனை ரயில் பெட்டி தொழிற்சாலையிலோ அல்லது சித்தரஞ்சன் லோகோ மோட்டிவ் ஒர்க்சிலோ அல்லது பெல்மூலமாகவோ உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் ஆத்ம நிர்பார் பூர்த்தி அடையும் என்று ரயில் பெட்டி தொழிற்சாலை சங்கம் கூறியது. இந்த அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்" என்றார்.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி மூலம் ஓராண்டில் 1,754 நியமனங்கள் போதுமானவையல்ல - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு