தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது - சு.வெங்கடேசன் எம் பி - தொல்லியல் துறை அறிவிப்பு குறித்து மதுரை எம்பி

மதுரை: மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பில் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Madurai MP S. Venkatesh
Madurai MP S. Venkatesh

By

Published : Oct 9, 2020, 10:57 AM IST

மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அதில் கல்வித்தகுதியில், சமஸ்கிருதம், பாலி உள்ளிட்ட மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ் அதில் இடம் பெறவில்லை.

இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தனர். அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்தையும் சேர்த்துள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "இந்தியத் தொல்லியல் துறை அறிவித்திருந்த தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித்தகுதியில் தமிழ்மொழி சேர்க்கப்படாதது குறித்து எனது கடுங்கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன். மு.க.ஸ்டாலின், தமுஎகச உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளும், அமைப்புகளும் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் இதுதொடர்பாக, பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்தையும் சேர்த்துள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பினை வரவேற்கிறேன்.

இந்தியத் தொல்லியல் துறைக்குள் நுழையும் வாசலிலேயே தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் அல்லாத பிற செம்மொழிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போக்க தமிழகமே உரத்துக் குரல் கொடுத்தது.

இந்தியத் தொல்லியல் துறை தனது விடாப்பிடியான இறுக்கத்தைத் தளர்த்தி மறுஅறிவிப்பு செய்ததைப் போல, ”இந்தியப் பண்பாட்டின் தோற்றத்தையும் பரிமாணத்தையும்” ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவினைக் கலைக்கும் அறிவிப்பினையும் விரைவில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details