மதுரை:இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “மதுரை விமான நிலையத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை போதாமையால் கூடுதல் விமானங்களை இயக்க முடியவில்லை. இதனால் வெளி நாடுகளுக்கான விமானங்கள் மதுரைக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இங்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு விமான நிலையங்களுக்கு சென்று விடுகின்றன.
ஆகவே, சிஐஎஸ்எப் படை வீரர்கள் கூடுதலாக மூன்றாவது பணி நேரத்திற்கு நியமனம் செய்யப்பட வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கையை நானும், தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை தொழில் வர்த்தக சபையினரும் முன் வைத்து வருகிறோம். மதுரையை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி (எண் 1499/15.12.2022) எழுப்பி இருந்தேன்.
அதற்குப் பதில் அளித்த ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங், 'இப்போதைக்கு இந்திய தொழில் பாதுகாப்புப் படை எண்ணிக்கையை அதிகரிக்கும் உத்தேசம் இல்லை. மொத்தப் பணியிடங்கள் 268, அவற்றில் நிரப்பப்பட்டு இருப்பது 263. விமானங்கள் காலை 7.15-லிருந்து இரவு 8 மணி வரைதான் இயக்கப்படுகின்றன. கூடுதல் விமானங்கள் இந்த நேரத்தைக் கடந்து இயக்கப்பட்டால் கூடுதல் தொழில் பாதுகாப்பு படை வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.