இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருப்பூர் காவல் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரக் குறும்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிகிற நான்கு இளைஞர்களை காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றுகிறார்கள். ஆம்புலன்ஸுக்குள் கரோனா நோயாளி ஒருவர் இருக்கிறார். இதைப் பார்த்து பதட்டமடைந்த இளைஞர்கள் எப்படியாவது அந்த நோயாளியிடமிருந்து தப்பிக்க, படாத பாடுபட்டு ஆம்புலன்ஸைவிட்டு வெளிவர முயன்று, கதறுகின்றார்கள்.
ஜன்னல்களுக்குள் புகுந்து வெளியேறப்பார்க்கிறார்கள். அப்படி வெளியேறுகிறவர்களைப் பிடித்து உள்ளே போடுகிறது காவல்துறை. கடைசியில் காவல்துறை அதிகாரி ஒருவர், “கரோனா உயிர்கொல்லும் வியாதி என்றும் கரோனா நோயாளியைப் பார்த்தவுடன் வருகிற பயம், ஏன் ஊரடங்கின் போது வருவதில்லை? உங்களுக்கு அருகில் இருப்பவர் கரோனா நோயாளியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே வீட்டிலேயே இருங்கள்” என்று நீதிச்சொல்லி முடிக்கிறார்.
இதென்ன பூச்சாண்டி ஆட்டம்? விதியை மதிக்காமல் ஊர்சுற்றுவோரைத் திருத்த இதுவா வழி? மதுரை முஸ்தாபாவின் மரணமும் மருத்துவர் சைமனின் மரணமும் கற்றுத்தந்தது போதாதா? இன்னும் இந்த களங்கத்திற்கு நீர் பாய்ச்சி வளர்க்க நினைகின்றதா காவல் துறை? பிழையைத் திருத்த வேண்டுமே ஒழிய, பயமுறுத்தல் மூலமாக அதனை வேறொரு பெரும்பிழையாக மாற்றிவிடக் கூடாது.