மதுரை:சென்னையை தொடர்ந்து மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி .டி .ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது. அதனை தெலங்கானாவை சேர்ந்த பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் பிரைவேட் கம்பெனி இந்த பணியை மேற்கொள்ள 51.62 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆய்வு பணியானது கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாத காலம் நடைபெற்றதாகவும் மே மாத இறுதி வாரத்தில் அதற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது ஆய்வறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
இதற்கிடையே மதுரை சேர்ந்த விஜயபாஸ்கர் என்ற நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு, மதுரையில் மெட்ரோ ரயில்சேவை தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து பார்சில் என்ற கட்டுமான நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மதுரையில் மெட்ரோ ரயில் சேவை குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.2,057 கோடி ஒதுக்கீடு