மதுரை:உலகப்புகழ் வாய்ந்த மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் மே 2 ஆம் தேதியான இன்று மீனாட்சிக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண நிகழ்வை காண உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண வைபவத்தின் போது பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சார்பில், சேதுபதி மேல்நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து 23 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை அறக்கட்டளை சார்பில் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாப்பிள்ளை அழைப்பிற்காகவும், திருக்கல்யாணம் நடைபெறும் இன்று காலை முதல் மாலை வரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளில் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.