மதுரை : உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி உற்சவம் விழா கொடியேற்றம் இன்று (ஜன.20) மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் மாசி மண்டல திருவிழா தான் அதிக நாள்கள் நடைபெறும் திருவிழாவாகும். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி சாமி சன்னதி கொடிமரம் முன்பு மீனாட்சியும் சுந்தரேச பெருமானும் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு வரும் பிப்.8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 10 நாள்கள் தினமும் காலை, இரவு என இரு வேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.