மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் முன்னிலையில் இன்று (டிச.26) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது.
உண்டியல் திறப்பின்போது திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை உதவி ஆணையர், இத்திருக்கோயிலின் தக்காரான மதுரை மண்டல இணை ஆணையரின் பிரதிநிதி, திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை வடக்கு மற்றும் தெற்கு சரக ஆய்வாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கமாக ரூ.1 கோடியே 34 லட்சத்து 74 ஆயிரத்து 759, தங்கம் 378 கிராம், வெள்ளி 843 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 225 எண்ணக்கையில் பெறப்பட்டுள்ளன எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், காவிரி, தாமிரபரணியைத் தொடர்ந்து இயற்கை வளங்களில் ஒன்றான நதிகளைத் தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக வைகை மஹா ஆரத்தி திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டின் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு, வைகை நதியின் மக்கள் இயக்கம் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில் வைகை ஆற்றங்கரைப் பேச்சியம்மன் படித்துறை பகுதியில், காசி கங்கை ஆரத்தி போல வைகை அன்னைக்குப் பௌர்ணமி நிலவில் மஹா ஆரத்தி திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓதுவார்கள் 13 திருமுறை, வேத மந்திரங்கள் போன்றவை வாசிக்கப்பட்டன. இந்த வைகை ஆரத்தி திருவிழாவில் திரளான பெண்கள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பின்பு, வைகை நதிக்குக் கற்பூரம் காட்டி, அடுக்கு தீபம், கும்ப தீபம், நாகதீபம், ஒரு முகதீபம், தூபம் (சாம்பிராணி) என 5 வகையான ஆரத்திகள் கொண்டு வைகை நதி வளமாக இருக்க வேண்டும் என வேண்டி ஆரத்திகள் காட்டப்பட்டன. பின்பு அங்குள்ள பக்தர்களுக்கும் ஆரத்திகள் காட்டப்பட்டன. மேலும், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆர்வமாக மதுரை வைகை ஆற்றுக்கு மஹா ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் ஐயப்ப பக்தர்களுக்கு 2வது முறையாக தன் வீட்டில் உணவு ஏற்பாடு செய்த இஸ்லாமிய நபர்..!