மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பல ஆண்டுகளாக தக்கார் பொறுப்பில் இருந்து வந்த கருமுத்து கண்ணன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர், மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தியாகராசர் நூற்பாலை ஆகியவற்றின் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.
கருமுத்து கண்ணன் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இவர் சமீபத்தில் நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் கூட கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்த கருமுத்து கண்ணனின் உடல் மதுரை கோச்சடையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் இன்று காலை முதல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் நாளை மதியம் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறைந்த கருமுத்து கண்ணன் கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் காமராஜர் விருது பெற்றுள்ளார். அதே போல் மத்திய அரசின் ஜவுளிக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருமுத்து கண்ணனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைந்தார். சிறந்த தொழில்துறை தலைவரான அவர் பல கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்தார். அன்பாக பழகக்கூடிய இயல்பைக் கொண்டவர். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்”என அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் தக்கார் திரு. கருமுத்து கண்ணன் அவர்கள் மறைந்த செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது தந்தை காலத்தில் இருந்தே கழகத்தின் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்த அவர் நான் எப்போது மதுரை சென்றாலும் பாசத்தோடும் இன்முகத்தோடும் வரவேற்பார்.