தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை கள்ளழகர் நிகழ்வில் இருவர் உயிரிழப்பு: காரணம் என்ன? - மதுரை கள்ளழகர் நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி தேனி, மதுரையைச் சேர்ந்த இரண்டு பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கள்ளழகர்
மதுரை கள்ளழகர்

By

Published : Apr 16, 2022, 1:39 PM IST

மதுரை:மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு சித்ராபவுர்ணமியான இன்று (ஏப்.16) காலை நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண மதுரை, சுற்றுவட்டார ஊர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கரோனா கட்டுபாடுகள் தளர்வுகளுக்குப் பின் பக்தர்கள் பங்கேற்று நிகழ்வு நடைபெற்றதில், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது.

இந்தநிலையில், இன்று காலை 6 மணி அளவில் நடைபெற்ற கள்ளழகர் நிகழ்வின்போது கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே கள்ளழகரை காண்பதற்காக பெரும் மக்கள் கூட்டம் அங்கு கூடியிருந்துள்ளது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததுடன், இருபத்தி நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் தேதி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான செல்வம் என்பதும், மற்றொருவர் மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஜெயலட்சுமி என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து மதுரை மாநகர காவல்துறை உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "கள்ளழகர் தல்லாகுளத்தில் இருந்து வைகையாறு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த ஆண்டு வைகை அணையிலிருந்து ஆற்றுக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டதால், பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்க அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உத்தரவிட்டிருந்தது. ஆகையால் பக்தர்கள் நிகழ்வைக் காண கோரிப்பாளையம் மூங்கில் கடைத்தெரு, ஆழ்வார்புரம் மற்றும் கீழ் பாலம் பகுதிகளில் அதிகளவு கூடினர். இதனால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டு காவல்துறையின் கடும் பாதுகாப்பையும் மீறி இச்சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கள்ளழகர் நிகழ்வின் போது ஆற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்ததை தவிர கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் உயிர்பலி அசம்பாவிதங்கள் நடைபெற்றதில்லை. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பொதுமக்களிடம் இச்சம்பவம் குறித்து கேட்டபோது, " கடந்த இரண்டு ஆண்டுகளாக அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கூட்டம் சற்று கூடுதலாக இருக்கும் என்பதை காவல்துறை கணித்து இருக்கவேண்டும். அதற்கு ஏற்றார்போல் மக்களை ஒழுங்குபடுத்தி அழகரை தரிசிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்காது" என்றனர்.

இதையும் படிங்க: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

ABOUT THE AUTHOR

...view details