தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எத்தியோப்பியாவில் வாழும் மற்றொரு பென்னிகுவிக்... - Madurai Youth as Professor in Ethiopia

வாழ்ந்து மறைந்தவர்கள் மட்டுமே வழிகாட்டிகளல்ல... வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் வழிகாட்டிகளாகவே வாழ்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டிருக்கும் ஒரு நபர்தான் பேராசிரியர் கண்ணன் அம்பலம். எத்தியோப்பியா மண்ணில் நீர் மேலாண்மையை ஏற்படுத்தி குளிரச் செய்யும் பொந்துகம்பட்டி மைந்தனின் கதை.

எத்தியோப்பியா மக்களுள் ஒருவராய் வாழும் மதுரை மைந்தன் கண்ணன்
எத்தியோப்பியா மக்களுள் ஒருவராய் வாழும் மதுரை மைந்தன் கண்ணன்

By

Published : Jun 9, 2020, 4:59 PM IST

"இந்திய ஆட்சிப் பணியில் தேர்வாகி மக்கள் பணியாற்றுவதே எனது கனவாக இருந்தது. ஆனாலும் அதில் 3 முறை தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. இருந்தபோதும் அது வேறொரு வடிவில் உலகத்தில் மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க மக்களுக்கு பணியாற்றுவதாக எனது பேராசிரியர் பணி அமைந்துவிட்டதை நான் பெருமையாகவே கருதுகிறேன். இங்கு வாழும் ஆப்பிரிக்க மக்களின் பாசத்திற்கும் பரிவுக்கும் முன்னால் எனக்கு இது பெரிய சாதனையாகவே தெரியவில்லை" என நெகிழ்கிறார் பேராசிரியர் கண்ணன் அம்பலம்.

மதுரை மாவட்டம் பொந்துகம்பட்டியைச் சேர்ந்த இவர், ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் மக்களை ஒருங்கிணைத்து நீர் மேலாண்மையில் சாதனை புரிந்து வருகிறார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் வேதியியல் பயின்று பின்னர் சென்னை கிறித்தவக் கல்லூரியிலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இந்திய ஆட்சிப் பணிக் கனவைக் கொண்டே வளர்ந்தாலும், அது கைகூடவில்லை கண்ணனுக்கு. மக்கள் பணிதானே எந்த வடிவத்தில் இருந்தால் என்ன என்ற விடா முயற்சி அவரை ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பிய நாட்டின் வொல்லேகா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக கொண்டு நிறுத்தியது.

எத்தியோப்பியோ மண்ணை குளிரச் செய்த மதுரை மைந்தனின் நீர் மேலாண்மை
அப்போது தான் பணியாற்றும் பல்கலைக்கழகம் அருகேயுள்ள பகுதிகளில் மக்கள் போக்குவரத்திற்கும் தண்ணீருக்கும் படுகின்ற இன்னல்களைக் கண்டு, அவர்களை ஒருங்கிணைத்து களத்தில் இறங்கினார். குறுகிய அளவே ஓடுகின்ற நதியைக் கடக்க முடியாமல், பல கி.மீ. சுற்றிச் செல்லும் கொடுமையைக் கண்டு அந்த ஆறுகளின் குறுக்கே உள்ளுர் மக்களின் உழைப்பு, தன்னுடைய சொந்தப் பணம் ஆகியவற்றைக் கொண்டு பாலங்கள் அமைக்கிறார். இப்படி அவரால் அமைக்கப்பட்ட சின்னஞ்சிறு பாலங்கள் மட்டுமே 43 ஆகும்.
ஆற்றோடு அல்லப்பட்டவர்களுக்கு சொகுசு பாலங்கள் - ஒன்றல்ல 43
அதேபோன்று குடிக்கின்ற தண்ணீருக்கு அவர்கள் படுகின்ற துயரத்தை பார்த்து, குடிநீரைச் சுத்திகரிப்புச் செய்யும் 28 சிறிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி, ஒரு தண்ணீர் தேக்கமும், கழிவறை ஒன்றும் அமைத்து தன்னுடைய மக்கள் பணியை அர்த்தமுள்ளதாய் மாற்றிக்கொண்டார். தன்னுடைய மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடு இதனைச் சாத்தியமாக்கியதாகச் சொல்லும் கண்ணன் அம்பலம், இந்தப் பணிகள் அனைத்திற்கும் தன்னுடைய சொந்தப்பணத்தையும், நண்பர்களால் வழங்கப்பட்ட நிதி உதவியையும் மட்டுமே பயன்படுத்தியுள்ளார். மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் தண்ணீர் தாகத்தைத் தணிப்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சியின்போது கர்னல் பென்னிகுவிக்கால் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. தனது சொந்தப்பணத்தைக் கொண்டு இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளித்த பென்னிகுவிக்தான் தனது வழிகாட்டி என்கிறார் பேராசிரியர் கண்ணன் அம்பலம்.
எத்தியோப்பியா மக்களுள் ஒருவராய் வாழும் மதுரை மைந்தன் கண்ணன்

எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டின் கிராமத்தில் உள்ளூர் மக்களின் தாகம் தணிக்கப் பணி செய்யும் இந்தத் தமிழர், மதுரை மாவட்டத்திலுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இன்று ஆப்பிரிக்க மக்களின் மனங்களை வென்ற மகத்தான மனிதராய்த் திகழ்கிறார். எப்படி வாழ வேண்டும் என்பதைவிட, வாழ்கின்ற காலத்தில் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு எப்படி பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்பதற்கு பேராசிரியர் கண்ணன் அம்பலம் போன்றவர்களே நல்ல முன்னுதாரணம்.

இதையும் படிங்க: 'நிற்க அதற்கு தக' - குறளாய் எதிரொலிக்கும் நேத்ராவின் குரல்



ABOUT THE AUTHOR

...view details