மதுரை: லயோனல் அந்தோணி ராஜ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை இருந்த காலக்கட்டத்தில் இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பலருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் தகுதியற்ற பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் உயர் மட்டக் குழு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்டக் குழு விசாரணை செய்து முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து அறிக்கையளித்தது. முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க சிண்டிகேட் துணைவேந்தருக்கு அதிகாரம் கொடுத்தது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்விற்கு தடை விதித்தும், உயர்மட்டக் குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உடனடியாக நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.