கடந்த 2014, 2015ஆம் ஆண்டிலிருந்து தொலைநிலைக் கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்குவதற்காக முறைக்கேடாக பணம் வசூலித்தல், தேர்வே எழுதாத மாணவ, மாணவியருக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதாக, பட்டச் சான்றிதழ் வழங்கியதும் இதற்காக கோடிக்கணக்கில் பணம் வசூலித்தாகவும் புகார் எழுந்தது.
இவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மு.கிருஷ்ணன் பதவி ஏற்றதும் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து தொலைநிலைக் கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டன. இதற்கான ஆவணங்களும் சிக்கின. இப்புகாரில் தொலைநிலைக் கல்வித்துறை கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் கார்த்திகைச்செல்வன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் தொலைநிலைக் கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய தொலைநிலைக் கல்வித்துறை கூடுதல் தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஹரிபரந்தாமன் தலைமையில் விசாரணைக் குழு இதுதொடர்பாக பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறும்போது, தொலைநிலைக்கல்வி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் மற்றும் மேலும் சிலர் மீது உள்ள முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகம் தன்னிச்சையாக எடுக்காமல் விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என்று சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில், முன்னாள் துணைவேந்தர் ஒருவர், தணிக்கையாளர் ஒருவர் உட்பட மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவினர் தொலைநிலைக் கல்வித்துறை முறைக்கேடுகள் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். குழுவினர் விசாரணை நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.