மதுரை காமராசர் பல்கலைக்கழக சான்றிதழ் பிரிவில் பணியாற்றிவந்த ஊழியர் ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த ஊழியர் கடந்த சனிக்கிழமை (ஜூலை 25) உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான செக்கானூரணி அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக ஊழியர்கள், உறவினர்கள் ஆகியோர் பெருமளவில் கலந்துகொண்ட நிலையில், இறந்துபோன ஊழியருக்கு கரோனா தொற்று இருந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து பல்கலைக்கழக சான்றிதழ் பிரிவில் பணிபுரிந்த அலுவலர்கள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சான்றிதழ் பிரிவிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கரோனாவால் காமராசர் பல்கலை. ஊழியர் உயிரிழப்பு: அனைத்துப் பணியாளர்களுக்கும் பரிசோதனை
மதுரை: கரோனா தொற்று காரணமாக ஊழியர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தொலைபேசி வாயிலாகக் கூறும்போது, ”பல்கலைக்கழக ஊழியர்கள் பலர் தற்போது வரை அலட்சியமாகவே இருந்து வருகின்றனர். இறந்த ஊழியர் மருத்துவமனையில் சேர்வதற்கு சில நாள்களுக்கு முன்பாகவே அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது.
காய்ச்சலுக்கு உடனடியாகச் சிகிச்சை பெறவில்லை. பாதிப்பு அதிகமான பிறகே நெஞ்சுவலி என்று கூறி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் இறந்த மூன்று நாள்கள் கழித்து அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவருடன் பணிபுரிந்த 22 ஊழியர்களுக்கு பல்கலைக்கழகம் மூலமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் 22 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வாயிலில் ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சானிடைசரும் வழங்கப்படுகிறது. மேலும் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் முகக்கவசம் அணியாமல் வரும் ஊழியர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. பல்கலைக்கழக பேருந்துகளிலும் முகக்கவசம் இல்லாதவர்களை ஏற்றிச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளைத் தாண்டி அவரவர் விழிப்புணர்வுடன் இருந்து முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.