மதுரை:கல்விப்பணியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், எண்ணற்ற துணைவேந்தர்களைத் தந்த பெருமைமிகு கல்வி நிறுவனமாகவும், லட்சக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பிற்கான திறவுகோலாகவும் திகழ்கிறது ‘மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்’.
கடந்த சில ஆண்டுகளாகவே நிலவி வரும் கடும் நிதிப்பற்றாக்குறை பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் வாரம் முனைவர் குமார், பல்கலைக்கழக துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் 136 தற்காலிகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் அனைவரும் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது குறித்து பல்கலைக்கழகப் பணியாளர் அம்ருதா கூறுகையில், “நாங்கள் 136 பேர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம். இந்த வேலையை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களது குடும்பங்களும் நடுத்தெருவுக்கு வந்துள்ளன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 136 பேரில் 85 பேர் அந்தந்த துறைக்கேற்ற உயர்கல்வித் தகுதியைக் கொண்டிருப்பவர்களாவர். எந்த அடிப்படையில் வெளியேற்றப்பட்டோம் என்பது தற்போதுவரை புரியாத புதிராக உள்ளது. கரோனா காலத்திற்குப் பிறகு கடந்த 3 மாதங்களாகத்தான் முழுமையாக பணிச்சூழலுக்கு திரும்பியுள்ளோம். மீண்டும் எங்களுக்குப் பேரிடி ஏற்பட்டுள்ளது” என்கிறார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட நிரந்தப் பணியாளர்கள் தவிர்த்து பல்வேறு நிலைகளில் பணியாற்றக்கூடிய தற்காலிகப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சராசரியாக 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களாவர். இவர்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவினங்களுக்காக பல்கலைக்கழகத்திற்கு மாதமொன்றுக்கு சற்றேறக்குறைய ரூ.10.5 கோடி செலவாகிறது. இதில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்களின் ஊதியம் சராசரியாக ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவர்களுக்காக மாதமொன்றுக்கு ரூ.14 லட்சம் செலவிடப்படுகிறது.
இது குறித்து அலுவலகப் பணியாளரான கார்த்திக் கூறுகையில், “நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி 136 பேரை பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. வருகின்ற மே 1ஆம் தேதியிலிருந்து எங்களுக்கான வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகப் போகிறது. எங்களுக்கு பெரிய அளவிலான ஊதியமெல்லாம் கிடையாது. வெறும் ரூ.10 ஆயிரத்தில் தான் எங்களது வாழ்க்கை பிழைப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் கடந்து செல்வது மிகக் கடினமாக உள்ளது” என்கிறார்.
பல்கலைக்கழக பணியாளர் கார்த்திக் மற்றொரு பணியாளரான செந்தில்குமார் கூறுகையில், “பல்கலைக்கழகத்தில் பத்தாண்டு பணி அனுபவம் எனக்கு உள்ளது. தற்போது என்னுடைய வயது 42. இனி வேறு எங்கு நான் வேலைக்குச் செல்ல முடியும். 136 மட்டும்தான் என்று நிர்வாகம் நினைக்கிறது. ஆனால் 136 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. குறைந்தபட்சம் ரூ.2,200லிருந்து ரூ.10 ஆயிரம் வரை வாங்கக்கூடிய ஊழியர்கள்தான் நாங்கள். நாள் கணக்கு என்பதால் அதையும்கூட பல மாதங்கள் முழுமையாகப் பெற முடியாது.
அண்மையில் பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த பல்கலைக்கழக தர நிர்ணயக்குழுவின் மதிப்பீட்டுப் பணிக்காக நாங்கள் மிக அதிகமாக உழைத்தோம். A++ தகுதிச் சான்று பெறுவதற்கு எங்கள் உழைப்பும் ஒரு காரணம்' என்கிறார். தவழும் மாற்றுத்திறனாளியான செந்தில்குமார், போராட்டத்தின் போது தீக்குளிக்க முயன்று காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக பணியாளர் செந்தில்குமார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் மதிவாணன் கூறுகையில், 136 பேர் பணி நீக்கம் என்பது சட்டவிரோதமானது. எந்தவித வரையறையும் இன்றி இந்த விதிமீறலைச் செய்திருக்கிறார்கள். எந்தவித அலுவல்பூர்வ கடிதம் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு காரணமானவர்களிடம் வசூல் செய்வதை விட்டுவிட்டு, எளிய பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அறமற்ற செயல். ஆண்டிற்கு ரூ.1 கோடி மட்டுமே செலவாகக்கூடிய ஒப்பந்தப் பணியாளர்களை நீக்கியது தவறாகும்' என்றார்.
பல்கலைக்கழக பணியாளர் மதிவாணன் பல்கலைக்ழக பாதுகாப்புக் குழுவின் செயலர் முனைவர் முரளி கூறுகையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டிலிருந்தே பல்கலைக் கழக செலவுகள் குறித்து தணிக்கைக் குழுவின் எதிர்ப்பு தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. இதனைச் சரி செய்ய இதுவரை யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. 5 ஆயிரத்து 517 தணிக்கை ஆட்சேபணைகள் இருந்தும்கூட அதற்கு எந்தவித நடவடிக்கைகளும் இல்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.
கடந்த 1993-1994ஆம் ஆண்டிலேயே தணிக்கை அறிக்கையில் தேவையற்ற செலவினத்திற்காக ரூ.43 ஆயிரத்திற்கு ஆட்சேபணை தெரிவித்துள்ளது. அது தற்போது அதே செலவினம் ரூ.48 லட்சத்து 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதற்கும் ஆட்சேபணை உள்ளது. இதற்கு என்ன பொருள். செலவுகள் பல்கலைக் கழகத்தில் முறைப்படி மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான்.
ஒவ்வோராண்டும் தொடர்ந்து எழுப்பப்படும் தணிக்கை ஆட்சேபணைகள் காரணமாக, பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய ரூ.25 கோடி இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்று அலுவலர்கள் கூறுகின்றனர். ஒரு கல்வி நிறுவனத்தின் நிர்வாகத் திறன் என்பது, பல்கலைக் கழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியைத் திறமுடன் பெறுவதில்தான் உள்ளது. அதுமட்டுமன்றி, பல்கலைக் கழகத்தில் நடைபெறும் தேர்வுகள் குறித்து பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகள் உள்ளன. தேர்வே எழுதாமல் பட்டம் பெற்றுச் சென்றுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இதற்காக அரசுத் தரப்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்த நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக தகுதியற்றவர்கள் அலுவலர்களாக நியமனம் பெற்று அமர்ந்துள்ளனர். இதன் காரணமாக தொலைதூரக் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்துபோய்விட்டது. 50 ஆயிரம் பேர் படித்துக் கொண்டிருந்த நிலை மாறி, தற்போது வெறும் 5 ஆயிரம்பேர் மட்டுமே பயில்கின்றனர். பல படிப்புகள் மூடப்பட்டுவிட்டன' என்கிறார்.
'அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரண்மனை உத்தியோகம்' என்பது போல பல்கலைக்கழக பணியென்று பெருமையோடு பல்லாண்டுகளாக உதிரம் சிந்தி உழைத்தவர்கள் இன்று அடுத்த மாத வாழ்வாதாரத்திற்கு வழி தெரியாமல் நடுத்தெருவில் நிற்கின்றனர். இவர்களின் அபயக்குரலுக்கு உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் செவிமடுக்குமா..? என்பதே இந்த பாவப்பட்ட பணியாளர்களின் இப்போதைய எதிர்பார்ப்பும்... ஏக்கமும்...
இதையும் படிங்க:காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த பரிதாபம்.. தஞ்சை தேர் விபத்தின் கோரம்...