மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக பணியாளர்களை ஈவு இரக்கமின்றி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளது கண்டனத்துக்குரியது என மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு அறிக்கை விடுத்துள்ளது.
இரக்கமற்ற செயல்:இது குறித்து காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவின் தலைவர் பேராசிரியர் சீனிவாசன், செயலாளர் பேராசிரியர் முரளி இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்த 135 தற்காலிகப் பணியாளர்களை ஈவு இரக்கமின்றி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதை மதுரை காமராஜர் பல்கலை கழகப் பாதுகாப்பு குழு வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் பணியாளர்களிடம் வேலை நேரம் கூட பார்க்காமல் மிகக் குறைந்த ஊதியத்தில் அவர்களிடம் உழைப்பை பெற்றுவிட்டு எந்தவித மனிதாபிமானமும் காட்டாமல் வெளியேற்றியது மிகவும் வருந்தத்தக்கது. அவர்களில் பலர் முறையாக நேர்முகத் தேர்வின் மூலம் பணி அமர்த்தப்பட்டவர்கள்.
அவர்கள் பணியமர்த்தப்பட்டது தவறு என்றால், இத்தனை ஆண்டுகளாக அவர்களுக்கு வேலையை கொடுத்து அவர்கள் உழைப்பையும் பெற்று வந்த பல்கலைக்கழக உயர்மட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் துணைவேந்தர்கள், அனைவரும் பொறுப்பாவார்கள்.
முதலமைச்சர் இதில் தலையிட வேண்டும்:தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த கோருகிறோம். மேலும், பல்கலைக்கழகத்தின் நிதி நிலை மிகவும் மோசமாக இருப்பதால், உயர்கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு, கணிசமான தேவைப்படும் நிதியை அரசு பல்கலைக்கழகத்திற்கு வழங்கி இனிவரும் காலங்களிலாவது நிர்வாகம் சீராக செயல்பட கவனம் செலுத்த வேண்டும்.
இத்தனை ஆண்டுகால நிர்வாக கவனமின்மைக்கு ஏழைத் தொழிலாளர்களை பழிவாங்குவது கண்டனத்துக்குரியது. தொழிலாளர் சட்டப்படி இத்தனை நாள் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதுதான் சரியான நீதியாகும். நூற்றுக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருக்கையில், அவற்றில் இதற்கு முன்னால் செய்யப்பட்டது போல தேர்வு முறைகளைக் கையாண்டு தற்காலிக பணியாளர்களை பணி வரன்முறை படுத்த கோருகிறோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி!