தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

A++: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சாதனையில் மற்றொரு மைல்கல் - Specialization of Madurai Kamarasar University

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குத் தேசிய தர நிர்ணய மதிப்பீட்டுக் குழுவின் A++ அந்தஸ்து கிடைத்திருப்பது, அதன் 50 ஆண்டு கால கல்விச் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

A++: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சாதனையில் மற்றொரு மைல்கல்
A++: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சாதனையில் மற்றொரு மைல்கல்

By

Published : Apr 5, 2021, 2:14 PM IST

பெருந்தலைவர் காமராஜரின் பெயரைத் தாங்கி நிற்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 55 ஆண்டுகளைக் கடந்த நிலையில், அண்மையில் நாக் (NAAC) என்னும் தேசிய தர நிர்ணய மதிப்பீட்டுக் குழு மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு A++ அந்தஸ்தைப் பெற்றது. இதனால், இந்தியாவிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவும், தமிழ்நாட்டிலேயே முதல் பல்கலைக்கழகமாகவும் தகுதி உயர்வு பெற்றுள்ளது.

காமராசர் பல்கலைக்கழகம் குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துகள் நிலவிவரும் நிலையில், இந்த நற்சான்று, அதன் 50 ஆண்டுகால கல்விச் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல்கலைக்கழகம் வழங்கிவரும் படிப்பு, கல்வித்தரம், ஆய்வகங்கள், தொழில்நுட்பம், பேராசிரியர்களின் தகுதி, ஆய்வுகள், அடிப்படைக் கட்டுமானங்கள், நிர்வாகமுறை, தனித்தன்மை எனப் பல்வேறு கூறுகளின் அடிப்படையில் இந்தத் தகுதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சாதனையில் மற்றொரு மைல்கல் - சிறப்புத் தொகுப்பு


இந்நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் மு. கிருஷ்ணன் வழங்கிய சிறப்பு நேர்காணலில், "தமிழ்நாட்டிலேயே முதன்மைப் பல்கலைக்கழகமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் 900-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளும் உள்ளன.

இவற்றில் 27 பல்கலைக்கழகங்கள் மட்டுமே A++ என்ற தகுதிச்சான்றைப் பெற்றுள்ளன. அஞ்சல் வழிக் கல்விச் சேவையில் முதன்மைப் பங்காற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இனிமேல் தொலைதூரக் கல்விப் பணியகத்தின் (DEB) அனுமதியின்றியே இனி அஞ்சல் வழிப்படிப்புகளை அறிமுகம் செய்யலாம்.

தனி அதிகாரமுள்ள பல்கலைக்கழகமாக இனி இயங்க முடியும். மேலும் ஆய்வுப் படிப்புகளுக்கு இனி தங்குதடையின்றி நிதி கிடைக்க வாய்ப்புண்டு. இங்கு பயிலும் மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கும், வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து பயில்வதற்கும் எந்தவித தடையும் இருக்காது" என்றார்.

இங்கு 77 துறைகள் மூலமாக 66 இளநிலை, 45 முதுநிலை, 35 எம்ஃபில், 17 டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது 2500 மாணவர்கள் பயில்கின்றனர். மிக நவீனமயப்படுத்தப்பட்ட நூலகத்தில் மூன்று லட்சம் நூல்கள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாரம்பரிய பண்பாட்டு மையத்தால் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மரபு சார்ந்த கண்காட்சி பலரையும் ஈர்த்துவருகிறது. அதுமட்டுமின்றி மரபணு ஆய்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.

பல்கலைக்கழகத்தின் நாக் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகர் பேட்டி


பல்கலைக்கழகத்தின் நாக் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகர் கூறுகையில், "தேசிய தர நிர்ணயக் குழுவுக்குப் புள்ளிவிவரத் தரவுகளைத் திரட்டித் தருவதும், குழுவினர் வரும்போது அவர்களை ஒருங்கிணைத்து பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தன்மைகளை அறியத்தருவதும் என இரண்டு பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. இவற்றையெல்லாம் திறம்பட வழிநடத்தியதுடன் அல்லாமல், அவை மாணவர்களின் எதிர்காலத்திற்கு எவ்வாறு பயன்படும் என்பதற்கான அறிக்கைகளும் வழங்கப்பட்டன" என்கிறார்.

பல்கலைக்கழக தரக்கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் முனைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்களது அறிக்கையை நாக் குழுவிற்குச் சமர்ப்பித்தோம். அதன் அடிப்படையில் பெங்களூருவிலுள்ள நாக் மையம் இதனை ஆய்வுசெய்து, பிறகு ஏழு பேர் கொண்ட குழு பல்கலைக்கழகத்திற்கு வருகைபுரிந்தது.

அனைத்துப் புலங்களையும், துறைகளையும் நேரில் கண்டு குழுவினர் ஆய்வுசெய்தனர். மாணவர்களின் சேர்க்கை, தேர்ச்சி, ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு, உயர்கல்வி, பணி சேர்க்கை ஆகியவை இந்த ஆய்வில் முக்கியப் பங்காற்றின" என்றார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வுக்காக வருகைதந்த நாக் குழுவில் ஜம்மு-காஷ்மீர், மிசோரம், டெல்லி, நாக்பூர், லக்னோ, புதுச்சேரி, கேரள பல்கலைக்கழகங்களைச் சார்ந்த பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட வல்லுநர்களே இடம்பெற்றிருந்தனர்.

பல்கலைக்கழக தரக்கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் முனைவர் பாலகிருஷ்ணன் பேட்டி


பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் வசந்தா கூறுகையில், "நாக் அமைப்பின் A++ தகுதிச்சான்று கிடைத்ததற்கு எங்கள் துணைவேந்தரின் அனுபவமும் முக்கியக் காரணமாய் அமைந்தது. பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் கூட்டுழைப்பே பல்கலைக்கழத்தின் சாதனைக்குக் காரணம். இதன்மூலம் பல்வேறு துறைகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என நம்புகிறேன். அஞ்சல்வழிக் கல்வியில் இருந்த கட்டுப்பாடுகள் இனி இருக்காது என்பது மிக வரவேற்புக்குரியது" என்றார்.

கடந்த 50 ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்களை உருவாக்கியதுடன், தமிழ்நாட்டிலேயே அதிக துணைவேந்தர்களை உருவாக்கிய பெருமைக்குரிய பல்கலைக்கழகமாகவும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் திகழ்கிறது.

அதற்குரிய A++ தேசிய தரச்சான்று என்பது நாளை பன்னாட்டுத் தரத்திற்கு உயர்வதற்கான நுழைவுச்சீட்டு என்றால் அது மிகையல்ல.

ABOUT THE AUTHOR

...view details