மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தில் நாடு முழுவதும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக தொலைதூரக் கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றது.
இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தொலைதூரக் கல்வி இயக்கக அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது கடந்த 2014-15ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டில் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்த 253 மாணவர்களின் விண்ணப்பத்தில் எந்தவிதமான சுயகுறிப்புகளையும் தெரிவிக்காமல் தங்களது புகைப்படம் மற்றும் முகவரியை மட்டுமே குறிப்பிட்டு உள்ளனர். பல விண்ணப்பங்களில் மாணவரின் பெற்றோர், தொலைபேசி எண்கள், புகைப்படம், முகவரி உள்ளிட்ட எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பதாரரின் பெயர் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு படிப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.