மதுரை:மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் தமிழகத்தின் முக்கிய ஆன்மீக சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. மலைகளின் பின்னணியில் 7 நிலைகளும், 7 கலசங்களும் கொண்டு, 120 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் இந்த கோயில் ராஜகோபுரத்திற்குக் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்துவதற்காகக் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் துவங்கப்பட்டது.
அதன்படி ரூ.2 கோடி மதிப்பீட்டில் பழமையான முறைப்படி பல்வேறு பொருட்களை வைத்துப் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது கோபுரம் புதுப்பொலிவு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 3ஆம் தேதி குடமுழுக்கிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதன் தொடர்ச்சியாகக் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை அடுத்து வழக்கத்தைவிட அதிகப்படியான பக்தர்கள் வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் தினமும் வருகைதந்தனர். இந்த நிலையில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 06.12. 2023 (புதன்கிழமை) இன்று உண்டியல் திறப்பு நடைபெற்றது.