மதுரை:சித்திரை பிறந்துவிட்டாலே மதுரை மண், தனது வழக்கமான நாள்களைவிட மிக உற்சாகமான வகையில் விழாக்கோலம் பூண்டுவிடும். காரணம், மீனாட்சி பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவற்றுடன் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் என லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற பெருவிழாவாகும். தன்னை அவமதிப்புச் செய்த சுதபஸ் முனிவரை மண்டூகமாய் சபித்துவிட, அந்த சாபத்தைப் போக்குவதற்காக மதுரைக்கு வருகின்ற அழகர் பெருமான், சமய, மத, மொழி, இன நல்லிணக்கத்துக்குச் சொந்தக்காரர் என்றால் அது மிகையல்ல. இதே சித்திரை மாதத்தில்தான் அந்த நிகழ்வும் மதுரை வண்டியூரில் நடந்தேறுகிறது.
திருமலை நாயக்கர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், அவர் செய்த சில முக்கிய பண்பாட்டு மாற்றங்களுள் ஒன்றுதான், கள்ளழகரை வைபவத்தை மதுரைக்கு அழைத்துவந்து வைகையாற்றில் எழுந்தருளச் செய்தது. மதுரையில் மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்ட நிகழ்வை சித்திரைக்கு மாற்றியதும், மதுரை அருகேயுள்ள தேனூர் கிராமத்தின் வைகையாற்றில் சித்திரை மாதம் எழுந்தருளிய கள்ளழகரை மதுரைக்கு அழைத்து வந்ததும் சைவ, வைணவ சமயங்களின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்காக திருமலை நாயக்கர் மேற்கொண்ட முதல் முயற்சி எனலாம்.
சுல்தான்களை விரட்டிய நாயக்கர்கள்:சித்திரை மாதத்தின் முதல் பாதி நாட்கள் சைவத் திருவிழாவாகவும், அடுத்து வருகின்ற நாட்கள் வைணவத் திருவிழாவாகவும், வைகையின் தெற்கு மற்றும் வடகரையில் இப்போதும் நடைபெற்று வருவது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சில காலங்கள், ஹைதர் அலி, டெல்லி சுல்தான்கள், மதுரை சுல்தான்கள், மாலிக்காபூர் உள்ளிட்ட இஸ்லாமியர்களின் ஆளுகையில் மதுரை இருந்தது. அப்போது இங்கிருந்த கோயில்கள் கொள்ளைடிக்கப்பட்டன. பிறகு விஜயநகரப் பேரரசு உருவானபோது, சுல்தான்களை விரட்டியவர்கள், நாயக்கர்கள்.
நாயக்கர்களால் தோற்கடிக்கப்பட்டாலும், மதுரையில் வாழ்ந்த இஸ்லாமிய பொதுமக்களின் சினத்தைத் தணிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான், கள்ளழகர் வண்டியூரில் இரவு துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குகிறார் என்ற புனைவு. சில ஆண்டுகள் முன்பு வரை வண்டியூரில் அழகர் தங்குகின்ற வீரராகவப்பெருமாள் கோயிலுக்கு அருகில் இஸ்லாமியர்களும் வாணவேடிக்கைகள் நிகழ்த்தி இந்த நிகழ்வில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர். அதுபோன்ற வாணவேடிக்கைகள் இப்போதும் நடைபெற்று வருகின்றன.