மதுரை காளவாசல் சந்திப்பில் நிகழும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும்வகையில், அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 2012ஆம் ஆண்டுமுதல் எழுப்பப்பட்டுவந்தது.
தொடர்ந்து மக்களின் கோரிக்கைக்கிணங்க, 2018 ஜூலை 15ஆம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுமார் 750 மீட்டர் நீளத்தில் 10 கண்களோடு 54.7 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட பாலம் அமைக்க காளவாசலில் அடிக்கல் நாட்டினார்.
1998ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்ட பெருமைக்குரிய வழித்தடங்களில் காளவாசல் பகுதியும் ஒன்றாகும். இந்தச் சந்திப்பின் வழியாக தேனி, போடி ஆகிய பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் பேருந்துகள் செல்கின்றன.
மேலும் காளவாசல் சந்திப்பிலிருந்து ஏறக்குறைய 6 கி.மீ. தொலைவில் நான்கு வழிச்சாலை அமைந்திருப்பதால், பல நேரங்களில் ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் செல்ல வேண்டிய பேருந்துகள் அனைத்தும் இந்தச் சாலையிலேயே சென்றுவருகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவந்தது.
இந்நிலையில், பணி தொடங்கி 18 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 23 மாதங்களுக்குப் பிறகு காளவாசல் உயர்மட்ட பாலப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9 மணியளவில், சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்காகப் பாலத்தை திறந்துவைத்தார். இதன்மூலம் இந்தப் பகுதியில் இதுவரை நிலவிவந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :பழங்குடியினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ!