'மதுரை' என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், மல்லி, ஜல்லிக்கட்டு, இட்லி அந்த வரிசையில் தவிர்க்கமுடியாத ஒன்று கேட்கவே நாவூறும் ஜிகர்தண்டா. இதனை ருசிக்கவே பலரும் மதுரைக்கு வந்து செல்கிறார்கள். காரணம், ஜிகர்தண்டாவானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பி குடிக்கும் பானமாக இருப்பதே!
சுண்டக் காய்ச்சிய பாலில் கடற்பாசி, பாதாம் பிசின், நன்னாரி சர்பத் இவற்றுடன் பாலாடை, பாசந்தி ஐஸ் கிரீம் என்ற சரியான கலவையில், பதத்தில் தயாராகுகிறது மதுரை மண்ணின் மகத்தான பானம் ஜிகர்தண்டா. இந்த ஜிகர்தண்டாவானது குளிர்ச்சியையும் சுவையையும் தாண்டி வைட்டமின்கள், புரோட்டீன்கள் நிறைந்த மிகச்சிறந்த பானமாகவும் திகழ்கிறது.
இந்த ஜிகர்தண்டா மதுரையில் பெரிய கடைகளில் இருந்து சிறு, குறு வணிகர்கள் வரையில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு, மதுரையின் அடையாளமாகவே மாறியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வட மாநிலத்து சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வந்தால், இந்த ஜிகர்தண்டாவை குடிக்காமல் செல்லமாட்டார்கள். அந்த அளவிற்கு 'ஜிகர்தண்டா' உலகப் புகழ்பெற்றதாக இருந்து வருகிறது.
மதுரைக்கே பெருமையான ஜிகர்தண்டா, தற்போது சிங்கப்பூர் மக்களையும் அண்மையில் கவரத்தொடங்கியுள்ளது. இதனால் மதுரை ஜிகர்தண்டா... தற்போது சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தனது அடுத்தகட்ட பரிணாமத்தை நோக்கிச் செல்கிறது.