மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாகத் தொடங்கி மாலை நிறைவுபெற்றது. இந்தப் போட்டியில் மதுரை மாவட்டம் குலமங்கலத்தைச் சேர்ந்த மாரநாடு என்பவரின் காளை சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்றது. அந்த மாட்டின் உரிமையாளருக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் ஹூண்டாய் கார் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கான இரண்டாவது பரிசை புதுக்கோட்டையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் அனுராதாவின் காளை பெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஜி.ஆர். கார்த்திக்கின் காளை மூன்றாவது பரிசை வென்றது.
அதேபோன்று, 16 காளைகளை பிடித்த அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை வென்றார். இவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஹூண்டாய் கார் பரிசாக வழங்கப்பட்டது.