தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் கோயில் திருவிழா: வழக்கை முடித்துவைத்த மதுரை உயர் நீதிமன்றம்!

மதுரை: கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் திருவிழா நெருங்கி வருவதால், விரைவாக தேர் வெள்ளோட்டம் நடத்தி அனைத்தையும் தயார் நிலையில் வைக்கக்கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை
மதுரை

By

Published : Dec 18, 2019, 6:56 AM IST

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த மகா.சிதம்பரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறும். இதனையொட்டி நடக்கும் தேர் திருவிழா வெகு விமரிசையாக இருக்கும்.

தற்போது இந்த கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர், கோயில் சுற்றுப்பகுதிக்கு கொண்டு வந்து வெள்ளோட்டம் பார்க்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்களை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த மாதம் 3ஆம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை திடீரென தள்ளி வைத்துள்ளதாகக் கூறுகின்றனர். கோயில் திருவிழா நெருங்கி வருவதால், விரைவாக தேர் வெள்ளோட்டம் நடத்தி, தயார்நிலையில் வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பாசத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘வருகிற ஏப்ரல் மாதம் கண்டதேவி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும். அதன்பின் ஜூன் மாதம் நடக்கும் கோயில் திருவிழாவில் தேரோட்டம் நடப்பதற்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன’ என்று கூறப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details