தென்காசி மாவட்டம் வி.கே. புதூர் அருகே உள்ள எரட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில்," தமிழ்நாட்டில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில், தேங்கும் நீரை கொண்டுதான் அந்தந்த பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இந்நிலையில், குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன் போன்ற மீன்கள் தென்காசி மாவட்டம் எரட்டிகுளம் கிராமத்தில் உள்ள கண்மாய்களில் வளர்க்கப்படுகின்றன.
இவை நம் பாரம்பரிய மீன்களை வேட்டையாடிவிடும். இவ்வகை மீன்கள் அதிக அளவு நீரை பயன்படுத்துவதோடு, அதிகளவில் இனப்பெருக்கம் செய்து கொண்டே இருக்கும். இதனை மனிதர்கள் உட்கொண்டால் அவர்களுக்கு பல விதமான உடல் நல குறைபாடுகளும், பக்க விளைவுகளும் ஏற்படும். எனவே இந்த வகை மீன்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், தனியார் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது .