மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், " நான் மதுரை மாவட்டம் வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2015ஆம் ஆண்டு முதல் உதவி அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன். முதுநிலை மருத்துவக் கல்வி பயில்வதற்காக நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தேன். அதில் அகில இந்திய அளவில் 2 ஆயிரத்து 180 ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்றேன். இதில், 50 விழுக்காடு இடங்களை மத்திய அரசும், 50 விழுக்காடு இடங்களை மாநில அரசும் நிரப்புகிறது. இதில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 விழுக்காடு இடங்களில் உள்ள 25 விழுக்காடு இடங்கள் பணியில் உள்ள இளநிலை அரசு மருத்துவர்களால் நிரப்பப்படுகிறது. எனவே, அந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் எனக்கு இடம் கிடைக்கும் என நினைத்திருந்தேன்.
ஆனால், அகில இந்திய மருத்துவ விதியின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பெண்களால் எனக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, தமிழ்நாடு மருத்துவப் படிப்புக்கான இடங்களை அகில இந்திய மருத்துவ விதியின் கீழ், மதிப்பெண்கள் வழங்கி நிரப்பக் கூடாது என உத்தரவிட வேண்டும் " எனக் கூறியிருந்தார்.