தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடஒதுக்கீடு முறையில் ஐஐடி பணியிடங்கள்: வழக்கு ஒத்திவைப்பு! - இடஒதுக்கீடு முறையில் ஐஐடி பணியிடங்கள்: வழக்கு ஒத்திவைப்பு!

மதுரை: சென்னை ஐஐடியில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், பேராசிரியர் பணியிடத்துக்கு, இடஒதுக்கீடு விதிமுறைகளைப் பின்பற்றி, தேர்வு செய்யப்பட்டவர்களை அறிவிக்கக் கோரிய வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் உயர் கல்விச் செயலாளர், ஐஐடி சென்னையின் செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோர் ஜூன் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Jun 2, 2020, 10:45 PM IST

தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் வினோத் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆந்திர பிரதேசத்திலுள்ள என்ஐடியில் உதவி பேராசிரியராக வேதியியல் பொறியியல் துறையில் பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 23.10.2019அன்று சென்னை ஐஐடியில் (IIT) உதவிப் பேராசிரியர் , பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து நான் வேதியியல் பொறியியல் துறையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன்.

இதனையடுத்து, பல்வேறு தேர்வு கட்டங்களைக் கடந்து, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். ஆனால், அதன்பிறகு எந்தவித பதிலும் இல்லை. நான் தேர்வு செய்யப்பட்டேனா அல்லது தேர்வு செய்யப்படவில்லையா என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து சென்னை ஐஐடி தேர்வு குழுவிடம் கேட்டபோது தெளிவான விளக்கம் இல்லை. அதே நேரத்தில் இந்தக் காலிப் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடும் போது, இட ஒதுக்கீடு அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை போன்ற எந்த விதமான தகவலும் அளிக்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்டவர்களின் தகவலையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

எனவே, ஐஐடி சென்னையில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர், பேராசிரியர் பணியிடத்துக்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் தேர்வு முறைகளான இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு போன்ற விதிமுறைகளை வெளிப்படையாகப் பின்பற்றி, காலிப் பணியிடங்களை தேர்வு செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி நிஷா பானு முன் விசாரணைக்கு வந்தது . அப்போது இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உயர் கல்விச்செயலாளர், ஐஐடி சென்னையின் செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோர் ஜூன் 30ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details