கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த மார்ச் மாதம் முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டு, மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தற்போது மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் மத்திய அரசு இ-பாஸில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால் சில மாநில அரசுகள் இ-பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளன.
இ-பாஸ் நடைமுறையின் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் தவித்து வருகின்றன. இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டால் மேலும் பொருளாதார சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இ-பாஸ் நடைமுறைக்காக தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். அதே போல், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக உருவாக்கப்பட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு முழுவதுமாக நீக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இ - பாஸ் நடைமுறை மற்றும் ஊரடங்கு உத்தரவை தமிழ்நாட்டில் ரத்து செய்வது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.