சாத்தான்குளம் தந்தை மகன் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதனடிப்படையில், இவ்வழக்கு சிபிஐக்கு மாறும் வரை தற்காலிகமாக சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்கும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, இன்று (ஜூலை 2) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் மனநல நிபுணர்கள் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகினர்.
கூடுதல் காவல்துறை தலைவர் தாமரைக்கண்ணன் காணொலி வழியாக ஆஜராகி, "காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாவட்ட அளவில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொருவரின் தனிப்பட்ட மன அழுத்த அளவும் கண்காணிக்கப்படுகிறது. சிபிசிஐடி தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையம், அரசு மருத்துவமனை, கிளைச்சிறை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடைபெற்றது. தலைமைக் காவலர் ரேவதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் தலைமை காவலர்கள் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். பாலகிருஷ்ணன், ஸ்ரீதர், முருகன் ஆகியோரை கோவில்பட்டி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் சேகர் கூறியதாவது, "கரோனா தொற்றின் காரணமாக மக்கள் நல்வாழ்வுத் திட்டம் தடைபட்டுள்ளது. மீதமுள்ள 26,000 காவல்துறையினர் விரைவில் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். டிஜிபி மட்டத்திலிருந்து காவலர் வரை பயிற்சி அளிக்கப்படுவார்கள். தற்போது வரை தமிழ்நாட்டில் இருந்து 254 காவல்துறையினர் மட்டுமே மாஸ்டர் பயிற்சியாளர்களாக பயிற்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணை இரட்டிப்பாக்க வேண்டும்.