விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது மகன் எந்த சிறையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஷ் மற்றும் நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், காவலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவித்து உத்தரவிட வேண்டும் என்று வாதிக்கப்பட்டது.
அரசு தரப்பில், இந்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிக்கையை சம்பந்தப்பட்ட போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரரின் மகன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து அவரை விடுவிக்க உத்தரவிட்டனர்
அதன்பின் நீதிபதிகள், இளைஞர்கள் செல்போன் மூலமாக ஆபாச படங்களை பார்த்து மனக் குழப்பம் ஏற்பட்டு பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் இளைஞர்களின் மனநிலை சரி செய்யப்பட வேண்டும். குற்ற சம்பவத்தில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பது அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல.
குற்றச் செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் இளைஞர்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்களின் மனதில் ஏற்பட்ட தவறான சிந்தனைகளைக் கலைத்து மீண்டும் இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதுவாக அமைய வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துகின்றது என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மதுரையைச்சேர்ந்த இருவர் மதுராந்தகத்தில் தற்கொலை