மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த கோபிநாத் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு முதன்மைச் செயலர் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அரசாணை எண் 29ஐ பிறப்பித்தார். அதன்படி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த ஓய்வு பெறும் வயது உயர்வு என்பது பொருந்தும். இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்றவற்றால் தமிழ்நாடு இளைஞர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். இளைஞர்களின் அரசுப் பணி கனவு நிறைவேறாமல் போக வாய்ப்பு உண்டு. ஆகவே ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.