மதுரை: கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதியின் அடிப்படையில் டிச. 19ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சீலிட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும், தேர்தல் முடிவுகள் வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் மனுதாரர் திருவிக்காவை தேர்தல் நடத்தும் நேரத்திற்கு முன்னதாக, மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்றனர். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் டிச. 19ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்து, தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரினர்.
அதற்கு நீதிபதிகள், முன்னமே இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு 22ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அன்று பார்த்து கொள்ளலாம் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.