மதுரை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் கடந்த மே மாதம் 25ம் தேதி வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வருமான வரி அதிகாரிகளை தாக்கி வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆவணங்களை பறித்து சென்றதாக திமுகவினர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திமுகவினர் பலரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் 15 திமுகவினர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.
இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வருமானத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையின் உதவி இயக்குநர் யோக பிரியங்கா, கிருஷ்ணகாந்த், மற்றும் ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.