தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார ஆட்சியர்களுக்கு உத்தரவு - court

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும், அதற்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்யவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Apr 25, 2019, 7:36 PM IST

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், தண்ணீரை முறையாக சேமிக்க முடியாமல் உள்ளது. கால்வாய்ப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பால், தண்ணீர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு காலதாமதமாகிறது. இதனால் சரியான நேரத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

குளங்கள், கண்மாய்களில் தொழிற்சாலைக் கழிவுகளை கலக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அகற்றவில்லை. தமிழ்நாட்டில் உள்ள நீர்தேக்கப் பகுதிகளை முறையாக பராமரிக்காமல் இருந்தால், 2020ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும் என்று நிதி ஆயோக் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்றி நீர் தேக்கப் பகுதிகளை பாதுகாக்கக்கோரி அரசு அலுவலர்களுக்கு மனுஅளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழ்நாட்டில் உள்ள நீர்தேக்கப் பகுதிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அரசு அலுவலர்களை தண்டிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இருதரப்பு விசாரணைக்கு பிறகு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்களையும் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தூர்வாருவதற்கென இயந்திரங்களை வாங்கியது போல, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தூர்வாரும் பணிக்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details