மதுரை மாவட்டம்வெள்ளியம் குன்றத்தைச் சேர்ந்த உஷா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நானும் எனது கணவர் சவுடியும், புதூர் ஐயப்பன் கோயில் அருகே தீபக் என்னும் ஹோட்டலை நடத்தி வருகிறோம். 2017ஆம் ஆண்டு ஹோட்டலுக்கான கட்டடத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக விவேக் என்னும் நபரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 10 லட்ச ரூபாய் முன் தொகையாகவும், 56 ஆயிரம் ரூபாய் மாத வாடகையாகவும் முடிவு செய்யப்பட்டது. அதன்பின் 2018ஆம் ஆண்டு கூடுதல் வாடகை ஒப்பந்தமும் பதிவு செய்யப்பட்டது.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விவேக், அவரது அடியாட்களுடன் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு மிரட்டினார். இதுதொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை திரும்பப் பெறுமாறு தொடர்ச்சியாக மிரட்டல் வருகிறது. நவம்பர் 18 ஆம் தேதியும் இதே போல மிரட்டல் வந்தது.
இதுதொடர்பாக நவம்பர் 24ஆம் தேதி காவல்துறையினரிடம் எனது கணவர் புகார் அளித்தார். அதன்பின் 28ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்த நிலையில் விசாரணைக்காக சென்ற எனது கணவர் வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, எனது கணவரை மீட்டு ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் சுந்தர மோகன் அமர்வு முன்பு நேற்று (டிசம்பர் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், காணவில்லை என கூறப்பட்ட மனுதாரரின் கணவர் மருத்துவமனை ஒன்றில் இருந்ததாக அறிந்து, அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கணவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்ட நிலையில், ஏன் மனுவை திரும்ப பெறவில்லை என்று கேள்வி எழுப்பி மனுதாரருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க:ஏ எப்புட்ரா...! இறந்ததாக கூறிய நபர் உயிர் பிழைத்த அதிசயம்...