தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களின் ஜாமீன் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - கரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை

கரூர் வருமான வரி சோதனையின் போது வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் ஜாமீன் பெற்றதை ரத்து செய்யக் கோரிய வருமானவரித்துறையினர் தாக்கல் செய்த வழக்கில், கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது

கரூரில் வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களின் ஜாமீன் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கரூரில் வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களின் ஜாமீன் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

By

Published : Jul 29, 2023, 9:14 AM IST

மதுரை: கரூர் வருமான வரி சோதனையின் போது வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், பெற்ற ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வருமானவரித்துறையினர் தாக்கல் செய்த வழக்கில், ஜாமீன் பெற்ற 19 பேர்களும் 3 நாட்களில் கரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு சரணடைய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. கரூர் குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

கரூரில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் மற்றும் நண்பர்கள் என பல்வேறு
இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது, அதிகாரிகளை தாக்கியது, ஆவணங்களை எடுத்துச் சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ரத்து செய்யக்கோரிய
வருமான வரித்துறையின் உதவி இயக்குனர் கிருஷ்ணகாந்த், துணை இயக்குனர் யோக பிரியங்கா, ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் மற்றும் காயத்ரி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "எங்களின் ஆவணங்களில் உள்ள முகாந்திரத்தில் அடிப்படையில் கடந்த மே 25ஆம் தேதி அசோக்குமார், மாரப்ப கவுண்டர் குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோரது வீடுகளில் சோதனை செய்தோம். சோதனை தொடர்பாக முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது.

சுமார் 11 மணியளவில் சோதனை நடைபெற்ற இடங்களுக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். நாங்கள் சோதனை செய்த உரிமையாளர்களிடம் கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு தெரிவித்தோம்.

வெளியே கூடி இருந்த நபர்கள் மோசமான வார்த்தைகளில் வருமான வரி துறையினரை பேசினர். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த கூட்டம், வருமானவரி துறையினரை தாக்கியதோடு, எங்களுக்கு சொந்தமான மடிக்கணினி, பென்டிரைவ் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றனர்.

மறுநாள் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உதவியுடன் சோதனையை தொடர்ந்தோம். எங்களிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பென் டிரைவ்கள், மடிக்கணினி திரும்ப வழங்கப்பட்டது. இருப்பினும் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படவில்லை. பென் டிரைவை பரிசோதித்த போது அதிலிருந்து தரவுகள் அழிக்கப்பட்டிருந்ததோடு பென்டிரைவ் பார்மட் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கரூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வருமானவரித்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதனை கருத்தில் கொள்ளாமல், கீழமை நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமின், முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆகவே, வழக்கில் கைது செய்யப்பட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்கில் கைது செய்யப்பட்டோர் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட அனைவரும் 3 நாட்களில் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் முன்பு சரணடையவும் உத்தரவு பிறப்பித்து உள்ளது. கரூர் நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details