மதுரை:பீகாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் திரிபுராரி குமார் திவாரி (எ) மணிஷ் காஷ்யப் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் திரிபுராரி குமார் திவாரி (எ) மணிஷ் காஷ்யப் அவரின் "Sach Tak News Channel" என்ற யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் தமிழ் நாட்டு மக்களால் கடுமையாகத் தாக்கப்படுவதாகவும், இதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்ற வகையிலும் குறிப்பிட்டு அந்த வீடியோவைப் பகிர்ந்தார்.
இந்தச் செய்தி பரவலானதை அடுத்து அதுபோல் ஒரு சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை எனவும், தவறான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த குற்றத்திற்காகவும் அவர் மீது வழக்குத் தொடர தமிழகக் காவல் துறை முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான தகவல் பீகார் காவல்துறைக்கு வழங்கப்பட்ட நிலையில் அம்மாநில காவல்துறை கடந்த மார்ச் 30ஆம் தேதி அவரை கைது செய்து தொடர்ந்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தது.