தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியரகத்தில் தூய்மைப் பணியாளர் தற்கொலை: உடற்கூராய்வு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு! - மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை: ஆட்சியர் வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட தூய்மைப் பணியாளரின் உடலை மறு உடற்கூராய்வு செய்யக்கோரிய வழக்கில், ஏற்கனவே செய்யப்பட்ட உடற்கூராய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Feb 20, 2021, 8:43 AM IST

மதுரை மாவட்டம் மானகிரியைச் சேர்ந்த கதிரவன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், "எனது தந்தை வேல்முருகன் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிவந்தார்.

கடந்த ஆறு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற எனது தந்தை இரவு 10 மணி ஆகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. இந்நிலையில் எனது தந்தையின் செல்போனை 10 முறை தொடர்புகொண்டபோதும் யாரும் எடுக்கவில்லை.

மறுநாள் என்னைத் தொடர்புகொண்ட சகோதரி எனது தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற நிலையில் காவல் துறையினர் எனது தந்தையின் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. எனது தந்தை தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்பு இல்லை.

எனது தந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில் எனது தந்தை அமர்ந்த நிலையில் இருப்பதும் அவருடைய கழுத்தில் கயிறு அழுத்தாமல் தளர்வாக இருப்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில் பார்க்கும்போது எனது தந்தை தற்கொலை செய்துகொண்டதற்கான அறிகுறிகள் இல்லை.

இந்தச் சூழலில் எனது தந்தையின் உடல் அவசரமாக அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. எனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் தந்தையின் இறப்பு தொடர்பான வழக்கை வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும்.

மருத்துவர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்து அதனைக் காணொலியாகப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஹேமலதா ஏற்கனவே செய்யப்பட்ட உடற்கூராய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் முதல்வருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details