தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அறிய சிறப்புக் குழு' - madurai high court

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

govt school

By

Published : Jul 22, 2019, 2:05 PM IST

புதுக்கோட்டையைச் சேர்ந்த சௌபாக்கியவதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை குலவைப்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய நிலையில் 2012 ஆகஸ்ட் மாதம் மதுரை நாயக்கன்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.

என்னுடைய பணி ஆணையை வழங்க அலுவலர்கள் தரப்பில் பணம் கேட்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்ததால், நான் முறையாக பணியாற்றவில்லை எனக்கூறி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "பட்டதாரி ஆசிரியர் சௌபாக்கியவதி கற்பித்த வகுப்புகளில் தொடக்கக் கல்வி அலுவலர் சிறப்பு பார்வை மேற்கொண்டபோது அடிப்படையான கேள்விகளுக்குக் கூட மாணவ மாணவிகள் பதில் அளிக்கவில்லை.

ஆங்கில எழுத்துகள் கூட பல மாணவர்களுக்கு தெரியவில்லை. பாடக்குறிப்பு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆசிரியை முறையாக பராமரிக்கவில்லை" என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து, "அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முறையாக வகுப்பெடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு அதிகமாக உள்ளது. ஆசிரியர் பணி என்பது புனிதமான பணி. வகுப்பறையில் வகுப்பு எடுப்பது என்பது கலை. மாணவர்களது அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் ஆசிரியர்களின் கற்பித்தல் சிறப்பானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதையும், முறையாக கற்பிப்பதையும் உறுதி செய்ய பல்வேறு விதிகள் உள்ளன.

மதுரை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை பொறுத்தவரை தொடக்கக் கல்வி அலுவலர் கேட்ட அடிப்படையான கேள்விகளுக்கு கூட மாணவர்கள் பதில் அளிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. ஆகவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் மீதான துறை ரீதியான நடவடிக்கையைத் தொடரவும் அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழுவானது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையின் கொள்கைகள் பள்ளிகளில் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யவும் குழுக்களை அமைக்க வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க நிபுணர் குழுக்களின் அறிவுறுத்தலின்பேரில் கல்விக் கொள்கையின் அடிப்படையில் வினா-விடைத் தொகுப்பை உருவாக்க வேண்டும்.

அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றம் செய்ய வேண்டும். தொடக்கக் கல்வியில் மாணவர்கள் வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணித செயல்பாடுகளை செய்தல் ஆகிய திறன்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதில் தவறும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details