தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேத பாடசாலை மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த வழக்கு: ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு! - கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவர்கள் உயிரிழப்பு

திருச்சி வேத பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த வழக்கில் வேதசாலையின் பொறுப்பாளர் ஸ்ரீநிவாச ராவிற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் மூன்று பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த வழக்கில் வேதசாலையின் பொறுப்பாளருக்கு ஜாமீன் மறுப்பு
மாணவர்கள் மூன்று பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த வழக்கில் வேதசாலையின் பொறுப்பாளருக்கு ஜாமீன் மறுப்பு

By

Published : Jun 24, 2023, 10:38 PM IST

மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்புப் பகுதியில் உள்ள ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இந்த பாடசாலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், கோயில் அர்ச்சகராவதற்காக வேதங்கள் கற்க, அங்கு தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பாடசாலையில் படித்த திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த சிறுவர்கள் விஷ்ணு பிரசாத், ஹரி பிரசாத், ஆந்திராவைச் சேர்ந்த அபிராம் ஆகிய மூன்று மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் இறந்ததைத் தொடர்ந்து அவர்களது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்படுள்ளது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குருகுலத்தின் நிறுவனர் பத்ரி நாராயணன் மற்றும் பொறுப்பாளர் ஸ்ரீநிவாசராவ் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்து வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று (ஜூன் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''வேத சாலையில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் சந்தியாவந்தனம் செய்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, காவிரி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இருவருக்கும் இதில் சம்பந்தம் இல்லை. இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' எனவும் வாதிட்டார்.

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அன்பு, ''வேத சாலையில் படிக்கும் மாணவர்கள் யாரேனும் தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரச்சொல்வது வழக்கம். சம்பவத்தன்று இறந்துபோன மாணவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுள்ளனர்.

எனவே, இவர்களை தண்டிக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்லப்பட்டுள்ளது. இதனையடுத்துதான் மாணவர்கள் ஆற்றுக்குச் சென்று உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்புத் தெரிவித்தார்.

இரண்டு தரப்பு வாதத்தையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் இரண்டாவது மனுதாரராக உள்ள வேத பாடசாலையின் பொறுப்பாளர் ஸ்ரீநிவாச ராவின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தின் காரணத்தால் தான் இந்தச் சம்பவம் நடைபெற்று உள்ளது எனவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், முதல் மனுதாரர் நிறுவனர் பத்ரி நாராயணனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி மோசடி - வங்கி உதவி மேலாளர் உள்பட 13 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details