மதுரை: சென்னைக்கு கோயம்பேடு மார்க்கெட் எப்படியோ அப்படித்தான் திருச்சிக்கு காந்தி மார்க்கெட். 1867-ம் ஆண்டு காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள் துவங்கி 1868ல் முடிந்தது. பின்னர் 1927-ம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டு 1934-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அதே ஆண்டு காந்தியடிகள் திருச்சி மார்கெட்டை திறந்து வைத்தார். இப்போது அவரின் பெயரிலேயே உள்ளது.
திருச்சியை சேர்ந்த அக்பர் அலி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிக்கன் - மட்டன் வியாபாரிகள் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சார்பாக 44 கடைகள் வைத்து பல வருடங்களாக நடத்தி வந்தோம். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்தி மார்க்கெட்டை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என திருச்சி மாநகராட்சி சார்பாக கடந்த 2021 ஆண்டு அறிவிப்பானை வழங்கப்பட்டது.
இதற்காக 13 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடும் செய்யப்பட்டு புது கட்டிடம் கட்ட ஏற்பாடு நடைபெற்றது. எங்கள் சங்கத்தின் சார்பாக 44 கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய கட்டிடத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தருவோம் என்று மாநகராட்சி தரப்பில் உத்தரவாதம் அளித்து இருந்தனர் அதனை ஏற்று 44கடைகளையும் காலி செய்து கொடுத்திருந்தோம்.
இந்நிலையில் கடைகள் முழுமையாக கட்டப்பட்டு தற்போது மாநகராட்சி சார்பாக 148 கடைகளுக்கு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏலம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம் மாநகராட்சி சார்பாக எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையின் கடைகள் ஒதுக்கீடு செய்யாமல் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஏல அறிவிப்புக்கு தடைவிதித்து, மாநகராட்சி அளித்த உத்திரவாதத்தின் படி பழைய கடை ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை அளித்து ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ் ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வெங்கடேஷ், மட்டன் - சிக்கன் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 44 கடை மாநகராட்சி சார்பாக ஒதுக்கீடு செய்வதாக உறுதிமொழி பெறப்பட்டது. அதன் அடிப்படையில் கடையை காலி செய்தோம். தற்போது ஏலத்தில் தங்களுக்கு எந்த கடையும் ஒதுக்கீடு செய்யவில்லை என வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி காந்தி மார்க்கெட் கடை ஏலத்தில் 44 கடைகளுக்கு ஏலம் நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: சிதம்பரத்தில் இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை! ஆளுநர் கூறியது முற்றிலும் உண்மை! NCPCR உறுப்பினர் தகவல்