மதுரை: வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போல் போலி வீடியோ வெளியிட்ட பீகாரை சேர்ந்த யூடியூபர் திரிபுராரி குமார் திவாரி (எ) மனிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் மனிஷ் காஷ்யப்க்கு "A" வகுப்பு வழங்க கோரி சகோதரர் தாக்கல் செய்த வழக்கு விசாரனைக்கு வந்தது.
டெல்லியை சேர்ந்த திரிபுவன் குமார் திவாரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, அதில் "என்னுடைய சகோதரர் திரிபுராரி குமார் திவாரி (எ) மனிஷ் காஷ்யப் பீகாரை சேர்ந்த பிரபல யூடியூபர். இவர் 2018 ஆம் ஆண்டு "Sach Tak News Channel" என்ற யூடியூப் பக்கத்தை உருவாக்கி பீகார் மக்களின் குறைகளையும், ஊழல்களையும் வீடியோவாக பதிவு செய்து யூடியூப் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
இதுபோன்ற செயல்பாடுகளினால் சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமான நபராக மாறினார். 2020 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் சன்பதியாவில் போட்டியிட்டு 9239 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். மனிஷ் காஷ்யப் சிவில் இன்ஜினியர் படிப்பு முடித்தவர். 2023 ஆம் ஆண்டு வரை முறையாக வருமான வரி செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க:வடமாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ: பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீண்டும் கைது!
இந்த நிலையில் மனிஷ் காஷ்யப் பீகார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்குவது போன்ற வீடியோ வெளியிட்ட வழக்கில் முதலில் பீகார் காவல்துறையினர் கைது செய்தனர். பின் மதுரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மதுரை காவல் துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எனது சகோதரர் மனிஷ் காஷ்யப்பை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.