மதுரை: மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு பிப்ரவரி, 2015ஆம் ஆண்டு அறிவித்தது. எங்கு அமைப்பது என்ற இழுபறி முடிவுக்குப் பிறகு, 4 ஆண்டுகள் கழித்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதுவரை அந்த இடத்தில் கட்டுமானப்பணி தொடங்கப்படவில்லை.
மத்திய சுகாதாரத்துறைச்செயலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நாளிலிருந்து, 45 மாதங்களில் கட்டுமானப்பணி முடியும் என மத்திய அரசு உறுதியளித்தது. இந்த வழக்கில் 2018இல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் தற்போது தோப்பூரில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதனால் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தொடர்பாக, ஜப்பான் நிறுவனத்துடன் மார்ச் 31, 2021ஆம் ஆண்டு ஒப்பந்தம் இறுதியாகும் என மத்திய அரசு தெரிவித்தது.