கன்னியாகுமரி: நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. இவர் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையிலும், கந்துவட்டிப் புகாரின் அடிப்படையிலும், நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் காவல் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இது தொடர்பான புகாரில், கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட காசி, பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைதானார். மேலும், காசியின் லேப்டாப் மற்றும் மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள், 1,900 நிர்வாணப் படங்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியுள்ளது.