திருச்சியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட இரணி அம்மன் கோவில் விழா நடைபெறுகிறது. இதை அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து நடத்துவது வழக்கம். ஆனால் இரு தரப்பினருக்கு இடையே கோயில் விழாவை யார் நடத்துவது எனப் பிரச்சினை உள்ளது. எனவே வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து தரப்பினரும் இணைந்து, விழா நடத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இவ்வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இது ஒரு வித்தியாசமான வழக்கு. கோயில் என்பது வழிபாட்டிற்காகத் தான் அமைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் அடையாளமாகக் கோயில்கள் உள்ளன. நம்பிக்கை நல்ல எண்ணம் பெறுவதற்காகப் பக்தர்கள் கோவிலுக்குச் செல்கின்றனர். கடவுள் எந்தவித உயர்வு தாழ்வு ஏற்றத்தாழ்வு பாகுபாடு பார்ப்பதில்லை . கடவுள் எந்த ஜாதியையும் ஏற்பதும் இல்லை மறுப்பதும் இல்லை. கடவுள், மனிதர்களிடம் மனிதாபிமானத்தைத் தான் எதிர்பார்ப்பார்.
இறைவனை வணங்கச் செல்பவர்கள் மனிதாபிமானத்துடன் இருப்பதுதான் முக்கியம். மனிதர்கள் மத்தியில் பாகுபாடு பார்ப்பதைக் கடவுள் ஏற்க மாட்டார். எனவே கோயில் என்பது மன அமைதிக்காகத் தான் , மனிதர்கள் இடையே பாகுபாடு உருவாக்குவதற்காக அல்ல. இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவில் இணை ஆணையர் இதுகுறித்து உரிய முடிவு எடுக்கலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:இன்னும் கோவிட்-19 ஓயவில்லை அதீத நம்பிக்கை ஆபத்தானது - எச்சரிக்கும் ராகுல்