விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பின் செயலர் சித்ரா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்துள்ள மனுவில், "வீ. கரிசல்குளம், திருவள்ளலூர், எஸ். நாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் நடத்திவந்த நியாயவிலைக் கடைகளைக் கூட்டுறவுத் துறைக்கு மாற்றி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நியாயவிலைக் கடைகளை நடத்த எங்களுக்கு வாய்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள், நாங்கள் நடத்திவந்த நியாயவிலைக் கடையின் சாவியை வாங்கிச் சென்றுவிட்டனர். ஆகவே ஆற்றல் பெண்கள் அமைப்பினர் நடத்திய நியாயவிலைக் கடையை கூட்டுறவு துறைக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆட்சியர் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தனர். பின்னர் இந்த உத்தரவை விலக்கக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது.