ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி டி.கரிசல்குளத்தை சேர்ந்தவர் சின்னமணி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் "கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழு தேர்தலில் என் மனைவி வாசுகி, 18 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடலாடி ஒன்றியத்தில் 25 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளில் திமுகவும், அதிமுக 11 வார்டிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 வார்டிலும் வெற்றி பெற்றனர்.
கடலாடி ஒன்றியக் குழு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆப்பனூர் முனியசாமி பாண்டியனின் மகள் வெற்றி பெற்றதால், தன் மகளை ஒன்றியத் தலைவராக்க முயன்றுள்ளார். இதனால் அவர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், முனுசாமி என்பவர் என் மனைவியை காரில் கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக சாயல்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
என் மனைவி கவுன்சிலராக பதவியேற்பதை தடுக்கும் விதமாகவும், ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும் ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கத்திலும் என் மனைவியை அதிமுகவினர் கடத்தியுள்ளனர். எனவே, கடலாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியேற்கவும், என் மனைவியை கண்டுபிடிக்கும் வரை ஜனவரி 11ஆம் தேதி தலைவர் தேர்தல் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
கிளி மூக்கு வால் சேவல் கண்காட்சி - முதல் பரிசைத் தட்டிச் சென்ற சென்னை சேவல்
தற்போது, இந்த மனு மீதான வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "காவல்துறையினர் கடத்தல் வழக்குப் பதிவு செய்து வாசுகியை கண்டுபிடித்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், "சின்னமணியின் மனைவி கண்டுபிடிக்கப்பட்டாலும் அச்சறுத்தல் உள்ளது. இதனால், காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்" என கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.