நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 2012ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கொலை செய்த வழக்கில் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஈஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் (எஸ்சி, எஸ்டி நீதிமன்றம்) 2015ஆம் ஆண்டும் ஜூன் 13ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இதனை எதிர்த்து ஈஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் அமர்வு , "இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வளைகுடா நாடுகள், ஆப்கானிஸ்தான், அரபு நாடுகள், எகிப்து, ஈரானில் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் பாலியல் குற்றவாளிகளை பொது இடத்தில் நிறுத்தி கல் எரிந்து கொல்லப்படுகின்றனர். மகாத்மா காந்தி, சாலையில் ஒரு பெண் இரவில் தனியாக நடந்து செல்லும் நாள் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுவேன் என்றார். காந்தியின் கருத்துபடி இந்தியாவில் பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.